ஜம்மு காஷ்மீரில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் வாக்களிக்க வந்தது அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இந்தியாவின் 17 வது நாடாளுமன்றத்தேர்தல் கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதல் கட்டமாக 91 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களுடைய ஜனநாயக உரிமையான வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் இருந்து திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். திருமணத்திபோது தம்பதிகள் அணிந்திருந்த உடையுடன் வந்து வாக்களித்தது அங்கிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீர் உதம்பூர் வாக்குச்சாவடியில் நடைபெற்றுள்ளது. தற்போது அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், பெங்களூரில் தங்களுடைய கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் இரண்டுபேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். விபா சிம்ஹா மற்றும் விந்தியா சுகன் ஆகியோர் தங்கள் கைக்குழந்தைகலுடன் பசவனகுடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குகளை பதிவு செய்தனர்.