தமிழக அரசுப் பணிகளை 100 விழுக்காடு தமிழர்களுக்கே வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வாணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள், நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டவர், மற்றும் பாகிஸ்தான், திபெத், அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டால் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் எனவும் சலுகை வழங்கப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை கண்டிப்பதாக கூறியுள்ள வேல்முருகன், கடந்த ஆண்டு திருத்தப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கர்நாடகம், குஜராத், மகராஷ்டிரா மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அரசு பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் 90 விழுக்காடு பணிகளை தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.