வேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்

வேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்
வேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்
Published on

வேலூர் சி‌.எ‌ம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருப்பது நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி வந்த இந்தக்கல்லூரி, இப்படியொரு முடிவு எடுக்க மத்திய அரசு திணித்த நீட் தேர்வு காரணமாக அமைந்துவிட்டதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எப்படி பாதிப்படைவார்கள் என்பதை சிஎம்சி கல்லூரியின் முடிவு ‌வெளிப்படுத்தியிருப்பதாகவும், எனவே மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீட்டை ஏற்க மறுத்து மாணவர் சேர்க்கையை நிறுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றி வந்த இந்தக் கல்லூரி, இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு மத்திய அரசு திணித்த நீட் தேர்வே காரணம். நீட் தேர்வின் பாதிப்புகளை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்துவைத்து, நீட் தேர்வு செல்லாது என்று 2013ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், இக்கல்லூரிதான் முக்கிய வாதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.

மேலும், “சி.எம்.சி.யில் உள்ள 160 மருத்துவ இடங்களையும், நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து, தனது வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி.” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேபோல், “நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் எவ்வளவு மோசமான முறையில் பாதிக்கப்படுவர் என்பதையும், சமூக நீதி பாதிக்கப்படுவதையும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் இந்த முடிவு வெளிப்படுத்தியிருக்கிறது. மருத்துவக் கல்வி பெறும் கனவில் மாணவர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகம் 160 இடங்களை இழப்பது என்பது தாங்க முடியாத கொடுமை. இதையெல்லாம், பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. ஆகவே, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

உடனடியாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்து, அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் சி.எம்.சி. கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்க வழிவிட்டு, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்றவும், மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com