எனது கட்டுரையின் நோக்கம் ஆண்டாளை பெருமைப்படுத்துவதே: வைரமுத்து விளக்கம்

எனது கட்டுரையின் நோக்கம் ஆண்டாளை பெருமைப்படுத்துவதே: வைரமுத்து விளக்கம்
எனது கட்டுரையின் நோக்கம் ஆண்டாளை பெருமைப்படுத்துவதே: வைரமுத்து விளக்கம்
Published on

தனது கட்டுரையின் நோக்கம் ஆண்டாளை பெருமைப்படுத்துவதே என கவிஞர் வைரமுத்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ராஜபாளையத்தில் ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பங்கேற்று ஆண்டாள் குறித்து உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு வைரமுத்து பேசும்போது, ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் இந்தப் பேச்சுக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழவே, அதற்கு வைரமுத்து வருத்தமும் தெரிவித்துவிட்டார். இருப்பினும் அதுதொடர்பான சர்ச்சைகளும், விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. வைரமுத்து மீது பல காவல்நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தனது கட்டுரையின் நோக்கம் ஆண்டாளை பெருமைப்படுத்துவதே என வைரமுத்து விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறகாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று விளங்கும். தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கும் தாயுள்ளங்கள் அதனை தவறாகப் புரிந்து கொள்ள கூடாது. என் மனம் துடிக்கிறது.

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் உயர்ந்தப் பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உயர்ந்தப் பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற பெயர்கள் வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். பின்னாளில் தேவதாசி என்ற பொருள் நிலவுடைமைச் சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றது.

தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த பேராளுமைகள் குறித்து நாளிதழ் ஒன்றில் எழுதி வருகிறேன். அந்த வரிசையில் ஆண்டாளின் பெருமையும் எழுத நினைத்தேன். இதனால் ஆண்டாளைப் பற்றி மூன்று மாதங்கள் அரிய நூல்களை படித்து தகவல் திரட்டி வருகிறேன். அந்தவகையில் சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு நூல்களையும் படித்தேன். அதில் “Bhakti Movement in South India” என்ற கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரை நாராயணன், கேசவன் ஆகிய அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டது. அதில் நாராயணன் இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தில் தலைவராக இருந்தவர். அந்தக் கட்டுரையில் அவர் எழுதிய ஒரே வரியைத் தான் மேற்கோளாக எடுத்தாண்டிருந்தேன். அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்தப் பொருளில் கொண்டிருந்தார்களோ, நானும் அதே உயர்ந்த பொருளில் தான் கையாண்டிருக்கிறேன்.

இதை புரிந்துகொண்டால் எவர் மனமும் புண்பட வேண்டிய அவசியம் இல்லை. 46 ஆண்டுகளாக தமிழோடு வாழ்ந்த வருகின்ற நான் என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தை புண்படுத்துவேனா?  எழுத்தின் பயன் அன்பும் இன்பமும் மேன்மையும் என்று கருதுபவன் நான். ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். என்பதே எல்லோருக்கும் என் அன்பான வேண்டுகோள்” என வைரமுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com