2047ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் தமிழகம் தனிநாடாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிரதமர் வருகையை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை சின்னமலையிலுள்ள வேளச்சேரி சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கமிட்டார். மேலும், கருப்பு நிற பலூன்களையும் அவர் பறக்கவிட்டார்.
அப்பொழுது செய்தியாளர்களின் பேசிய வைகோ, “மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது. 2047 ஆம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டின் பல்வேறு பகுதிகள் தனித்தனி நாடுகளாக மாறியிருக்கும். அதில் தமிழகமும் ஒன்று. என்னுடைய கருத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இந்தக் கருத்துக்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யட்டும்” என்றார்.