அசோசியேட் பிரஸ் விசாரணை மூலம் இலங்கை அரசின் கொலைவெறிக் கொடுமை அம்பலமாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடூரத்தோடு ஈழத்தமிழ் இனப்படுகொலைக் கொடுமைகள் முற்றுப்பெறவில்லை என்றும் தற்போதும் தொடர்வதாகக் கூறியுள்ளார். ஐரோப்பா கண்டத்திற்கு அடைக்கலம் தேடிச் சென்ற ஈழத் தமிழர்கள் இலங்கையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை இதயம் வெடிக்க தெரிவித்திருப்பதாகவும், வைகோ கூறியுள்ளார்.
அசோசியோட் பிரஸ் விசாரணையின்போது தமிழ் இளைஞர் ஓருவர், தான் சின்னஞ்சிறு அறையில் 21 நாட்கள் சித்ரவதைக்கு உள்ளானதாகவும், சிகரெட் நெருப்பால் உடலில் சூடு வைக்கப்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துதை வைகோ குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு வெளிச்சம் வழங்கக்கூடிய காலம் வந்தே தீரும் என்றும் அவர் கூறியுள்ளார்.