தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மும்பை வடக்கு காங்கிரஸ் வேட்பாளரும் நடிகையுமான ஊர்மிளா மடோன்கர் புகார் கூறியதை அடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ராம் கோபால் இயக்கிய ’ரங்கீலா’, ‘சத்யா’ உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் கட்சி தொண்டர்களுடன் போரிவிலி பகுதியில் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டபோது, பா.ஜனதா தொண்டர்கள் திடீரென மோடிக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் பதிலுக்கு, மோடி திருடன் என்று கோஷமிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊர்மிளா, போரிவிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப் பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை அவருக்கு போலீஸ் பாதுகாப்புத் தொடரும் என மும்பை போலீஸ் துணை கமிஷனர் சங்ராம் சிங் நிஷாந்தர் தெரிவித்துள்ளார்.