நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்படும் வாக்குச்சீட்டுகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்களின் பதிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் பொருட்கள், கொரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்களின் இருப்பு விவரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.