விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனி (எ) முத்தையா மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அந்த வார்டில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி அரசியல் கட்சி மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி விருதுநகர் மாவட்டத்திலும் பரப்புரைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் வத்திராயிருப்பு பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் 14,348 வாக்காளர்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த பேரூராட்சி 2-வது வார்பில் திமுக சார்பில் கனி (எ) முத்தையாவும், அதிமுக சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர். இவர்களில் நேற்று மாலை வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக வேட்பாளர் முத்தையாவிற்கு (வயது 54), நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை உறவினர்கள் நள்ளிரவில் வத்திராயிருப்பு அரசு மருத்துமனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கனி (எ) முத்தையா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திமுக மட்டுமன்றி, அப்பகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அவரது இறப்பின் காரணமாக, அந்த வார்டில் தேர்தல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: அமைதியாக நடைபெறும் கோவா தேர்தல் - புதிய கட்சிகளால் எகிறும் எதிர்பார்ப்பு