நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜ்பப்பார் ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. பாஜக கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனிப் பெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
காங்கிரஸ் கட்சி, 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக 49.6 சதவிகிதம், பகுஜன் சமாஜ் 19.26 சதவிகிதம், சமாஜ்வாடி கட்சி 17.96 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வெறும் 6.31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.இந்நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித் தார். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பார் ராஜினாமா செய்துள்ளார்.