தலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி

தலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி
தலித் வீடுகளில் சாப்பிட நான் ஒன்றும் கடவுள் ராமர் அல்ல: மத்திய அமைச்சர் உமா பாரதி
Published on

சமீப காலமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தலித் வீடுகளுக்கு சென்று சாப்பிடும் வழக்கத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், ‘தலித் வீடுகளுக்கு செல்லும் அரசியல்வாதிகள் அங்கு தயாராகும் உணவை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக, வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்கின்றனர். அதை பரிமாறுவதற்கும் வெளியாட்களை அழைத்து வருகின்றனர்’ என்பது போன்ற விமர்சனங்களும் அவ்வவ்போது எழுகின்றன. அரசியல்வாதிகளின் இந்த செயல் தலித்களை அவமதிப்பதாக உள்ளது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் ஒருபகுதியாக தலித்துகளின் வீடுகளுக்கு செல்லும் பாஜக அமைச்சர்கள் அவர்களுடன் உணவருந்துகின்றனர். அப்படி தலித் வீடுகளுக்கு உணவருந்த செல்லும் பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கூறும் கருத்துக்கள் தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள தாத்ரி கிராமத்தில் தலித் மக்களுடன் உணவருந்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் உமா பாரதி கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் தலித் மக்களுடன் உணவருந்த அவர் மறுத்துவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

விமர்சனங்கள் குறித்து உமா பாரதி கூறுகையில், “தலித் மக்களுடன் சேர்ந்து உணவருந்தி அவர்களை புனிதப்படுத்த நான் ஒன்றும் கடவுள் ராமர் இல்லை. தலித் மக்களுடன் நானும் உணவருந்த வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று நான் உணவருந்துதில்லை. இருப்பினும் இந்த பழக்கத்தை ஆதரிக்கிறேன். தலித் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் சாப்பிடவில்லை எனினும் அவர்களை என்னுடைய வீட்டிற்கு அழைக்கிறேன். டெல்லிக்கு வாருங்கள். என்னுடைய மருமகன் உங்களுக்காக உணவு சமைப்பார். நான் உங்களுக்கு பரிமாறுவேன். சாப்பிட்ட பின்னர் உங்களுடைய பிளேட்டுகளை மருமகன் எடுத்து சுத்தம் செய்வார்” என்று கூறினார்.  

இதனிடையே, கொசுக்களின் கடிகளை தாங்கிக் கொண்டு தலித் வீடுகளில் தங்கினோம் என்று உத்தரபிரதேச அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதுகுறித்து அடிப்படை கல்வி அமைச்சரான அனுபமா ஜெய்வால் கூறுகையில், “தலித் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய அவர்களின் வீடுகளுக்கு அமைச்சர்கள் செல்கின்றனர். அங்கு கொசுக் கடிகளையும் தாங்கிக் கொண்டு இரவுகளில் தங்குகிறோம்” என்றார். அவரது கருத்தினை சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. முன்னதாக சமீபத்தில் உபி அமைச்சர் சுரேஷ் ரானா, அலிகாரில் உள்ள தலித் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் தனது வீட்டில் இருந்து சமைத்த உணவை கொண்டு போய் உணவருந்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், கிராமத்தில் கிராம மக்களாலேயே உணவு தயாரிக்கப்பட்டதாக கூறினார்.

பாஜக தலைவர்கள் தலைவர்கள் தலித் வீடுகளில் உணவருந்துவதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் பகவத், “பாஜக அமைச்சர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு செல்வது மட்டும் போதாது, அங்கு அவர்கள் வரவேற்பது போல, தலித்துகளையும் தங்கள் வீடுகளுக்கு அமைச்சர்கள் வரவேற்க வேண்டும். வெறுமனே தலித்துகள் வீடுகளுக்கு சென்று உணவருந்துவதால் நல்லிணக்கம் ஏற்பட்டு விடாது, அவர்களின் அந்தஸ்தும் பொருளாதார நிலையும் மேம்பட பாடுபட வேண்டும்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com