ஐஃபோன் 14 சீரிஸே 65 ஆயிரம்தான்.. ஆனா 2007ல் வந்த OG வெர்ஷன் 32 லட்சமா? சுவாரஸ்ய தகவல்!
டெக் உலகின் ஜாம்பவான்களில் ஒன்றாக இருக்கக் கூடியது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகளுக்கு உலகெங்களிலும் பல மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேட், ஐமேக், ஐவாட்ச், ஏர்பாட் போன்ற புராடெக்ட்களின் புது அம்சங்கள் கொண்ட மாடல்களை ஆண்டுதோறும் வெளியிட்டு அதன் வாடிக்கையாளர்களை அசந்துப்போக செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் ஐஃபோன் 14 சீரிஸ் மொபைலை அறிமுகம் செய்திருந்தது. ஐஃபோன்களின் அதிகபட்ச விலை கொண்ட மாடலாக 14 சீரிஸ் வகை இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ஐஃபோனின் இந்த அதிக விலை கொண்ட மாடலை ஐஃபோனின் ஃப்ர்ஸ் ஜென் மொபைல் முறியடித்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐஃபோனின் முதல் தலைமுறை மொபைல் ஃபோன் தான் தற்போது 32 லட்ச ரூபாய்க்கு மேல் ஏலத்தில் விற்கப்பட்டிருப்பது டெக் உலகத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. first gen ஐஃபோனான இந்த மாடல் 2 மெகா பிக்சல் கேமரா, 4 மற்றும் 8 ஜிபி வேரியன்ட்கள், கட்டிங் எட்ஜ் டக் ஸ்க்ரீன் அம்சங்களுடன் சஃபாரி வெப் பிரவுசருடன் மட்டுமே வெளியானது.
இந்த ஐஃபோன் விற்பனைக்கு வந்த போது 499 மற்றும் 599 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வகையின் unbox செய்யப்படாத ஐஃபோன் தான் அமெரிக்காவைச் சேர்ந்த LCG ஏல நிறுவனத்தால் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி 2500 டாலருக்கு தொடங்கப்பட்ட இதற்கான ஏலம் கடந்த அக்டோபர் 16ம் தேதிதான் 39,399 அமெரிக்க டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 32 லட்சத்து 44 ஆயிரத்து 740 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 60 மடங்கு அதிகமான விலை கொடுத்து ஐஃபோன் ஃபர்ஸ்ட் ஜென் மொபைலை ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் அத்தனை லேட்டஸ்ட் அம்சங்கள் அனைத்தும் அடங்கிய ஐஃபோன் 14ன் விலையே 799 டாலராகவே இருக்கும் நிலையில், 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு முதல் வேரியன்ட் ஐஃபோன் 32 லட்ச ரூபாய்க்கு மேல் விலை போயிருப்பது பெருமளவில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.