பிரிட்டனில் வரலாறு காணாத வகையில், அரசியல் சூழலோடு சேர்ந்து வெப்பமும் வாட்டி வதைத்து வருகிறது. ஜூலை 18ம் தேதியான இன்று இங்கிலாந்தின் அதிக வெப்பம் தகிக்கும் நாளாக கருதப்படும் என அந்நாட்டு வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது.
அதன்படி முதல் முறையாக, இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 100ஐ கடந்ததை அடுத்து அந்நாட்டு மக்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் ஜூலை மாத வாக்கில் இங்கிலாந்தில் 21 டிகிரி செல்சியஸ்தான் வெப்பம் பதிவாகும். ஆனால் பிர்மிங்காம், மான்செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களில் நடப்பு கோடையில் 38 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகிறது.
திடீரென வெப்பநிலை அதிகரித்தால் இங்கிலாந்து மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் தொற்றியிருக்கிறது. இந்த வெப்பநிலை பலருக்கும் காசு பார்க்கும் நேரமாகவும் அமைந்திருக்கிறது.
அதன்படி, வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தில் தள்ளுபடிகள் அறிவிப்பது, மால்களின் இயங்கும் நேரத்தை நீட்டிப்பது என வியாபார உத்திகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்த வகையில், Showcase Cinemas என்ற தியேட்டர், புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெப்பத்தால் தவிக்கும் மக்கள் ஷோகேஸ் தியேட்டருக்கு வந்து இலவசமாக படம் பார்க்கலாம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என அறிவித்திருக்கிறது.
அது என்ன கண்டிஷன் என்றால், இலவசமாக தியேட்டருக்கு படமாக்க வருவோருக்கு சிவப்பு நிறத்தில் முடி இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் அனுமதி இல்லை என விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள ஷோகேஸ் சினிமாஸின் பொது மேலாளர் மார்க் பார்லோ, “பொதுவாக இங்கிலாந்தில், தேவையான வெயிலை அனுபவிக்க வெளியே இருக்கும் மக்களுக்கு இடையே சிலர் வெப்பத்தை தணிக்கவும் நினைக்கிறார்கள்.
ஆகவே வெப்ப அலையில் இருந்து தப்பிக்க எண்ணுவோர் சிவப்பு நிற தலைமுடி இருந்தால் இலவசமாக ஏசி சினிமா ஹாலில் படம் பார்த்துக்கொள்ளலாம். இது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் நடைமுறையில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.