வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ700 கோடி நிதியுதவி அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். அப்போதைக்கு மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி மட்டும் கேரள நிவாரண நிதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தைவிட மத்திய அரசு குறைவாக கொடுக்கிறது என்ற பேச்சு அடிபட்டது.
அதன்பின்னர், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியுதவியை பெறுவதில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் பேசப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. பின்னர், நிதியை பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இதனால், கேரளாவுக்கு வரும் நிதியை மத்திய அரசு தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவாதம் கடந்த சில தினங்களாகவே தீவிரமாக இருந்து வந்தது.
இந்நிலையில் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ரூ.700 கோடி தருவதாக ஐக்கிய அரசு அமீரகம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அதன் தூதர் அமகது அல்பன்னா தெரிவித்தார். இந்தச் செய்தி மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.
இந்நிலையில், எல்லோருடையை பார்வையும் தற்போது முதலமைச்சர் பினராயி விஜயன் மீது திரும்பியுள்ளது. எந்தத் தகவலின் அடிப்படையில் ரூ700 கோடி என்பதை அவர் தெரிவித்தார் என்று அம்மாநில பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், செய்தியளர்களை நேற்று மாலை சந்தித்த பினராயி விஜயன் ரூ700 கோடி விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். பினராயி விஜயன் பேசுகையில், “இந்தச் செய்தியை இருநாட்டு தலைவர்கள் உலகிற்கு கூறியுள்ளார்கள். தற்போது விஷயம் அதனை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதுதான். என்னுடைய பார்வை, அந்த நிதியுதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது” என்றார்.
மேலும், “வளைகுடா தொழிலதிபர் யூசப் அலிதான் தன்னிடம் இந்தத் தகவலை தெரிவித்தார். இதனை ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து இருக்கிறேன். யூசப் அலி, ஐக்கிய அரபு அமீரகம் தலைவர்களை சந்தித்த போது அவரிடம் இதனை தெரிவித்துள்ளார்கள். பின்னர் அலி என்னிடம் இந்தத் தகவலை கூறினார். நான் அப்பொழுதே அவரிடம் கேட்டேன், மக்கள் மத்தியில் இதனை கூறலாமா என்று?. சொல்லுங்கள் என்று அவர் உறுதி அளித்தார். நானும் தெரிவித்தேன்.
பிரதமர் மோடியின் ட்விட்டரில் உள்ள தகவலை படித்தாலே புரியும். ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமதுவிற்கு பிரதமர் மோடி கடந்த 18ம் தேதி அனுப்பிய ட்விட்டில், ‘கேரளாவின் தற்போதையை இக்கட்டான சூழலில் நீங்கள் நிதியுதவி அறிவித்துள்ளதற்கு மிக்க நன்றி. உங்களுடைய கவலை இருநாட்டு அரசாங்கள் மற்றும் இந்திய, ஐக்கிய அரபு அமீரகம் மக்களிடையே உள்ள சிறப்பான உறவை காட்டுக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்” என்றார் பினராயி விஜயன்.