இயற்கை உபாதைக்காக சென்ற குழந்தைகள்... வாய்க்காலில் சடலமாக மீட்பு

இயற்கை உபாதைக்காக சென்ற குழந்தைகள்... வாய்க்காலில் சடலமாக மீட்பு
இயற்கை உபாதைக்காக சென்ற குழந்தைகள்... வாய்க்காலில் சடலமாக மீட்பு
Published on

சமயபுரம் அருகே தண்ணீரில் மூழ்கி இரு குழந்தைகள் மாயமான நிலையில் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர். 


திருச்சி மாவட்டம், சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரனின் மனைவி அனிதா. இவர், திருச்சி தில்லைநகர் 3-வது குறுக்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி (6), நரேன் (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்லும் நேரத்தில் குழந்தைகள் இருவரையும், அனிதாவின் தாயார் கவனித்து வந்துள்ளார். நேற்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதைக்காக பெருவளை வாய்க்காலின் கரையோரத்தில் உட்கார்ந்திருந்துள்ளனர். வீட்டிலிருந்த பாட்டி குழந்தைகள் இருவரையும் காணவில்லையே என வாய்க்கால் கரையோரத்தில் பார்த்தபோது, அவர்கள் அணிந்திருந்து காலணிகள் மட்டும் கரையோரத்தில் கிடந்தன. குழந்தைகள் இருவரையும் காணவில்லை.

இந்நிலையில் குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக கூறிய நிலையில் சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் குழந்தைகள் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், சமயபுரம் உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வந்திருந்து, பெருவளை வாய்காலில் வரும் தண்ணீரை முற்றிலுமாக நிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டனர். 

பின்னர் தண்ணீரில் மாயமான குழந்தைகளை இரவு நேரங்களிலும் தேடுமாறு சமயபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்புபடை வீரர்களுக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 12 மணி நேரம் தீவிரமாக தேடிய நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரையும் அதே பகுதியில் சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய சமயபுரம் போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தைகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com