தூத்துக்குடியில் வணிகர்களான தந்தை - மகன் இறந்த விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செல்போன் கடை நடத்தி வந்த வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறியதாகவும், காவல்துறையினரை தகாத வார்த்தையில் பேசி பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரகுகணேஷ் 19ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் பணியில் இருந்த போது, சாத்தான்குளம் தலைமை காவலர் முருகன் தன்னிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே முருகனும், காவலர் முத்துராஜ் என்பவரும் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு செல்போன் கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் பொதுமுடக்க விதியை மீறி சிலருடன் கடை முன்பு நின்றுகொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் தாங்கள் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் வீட்டிற்கு செல்ல, ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் தகாத வார்த்தைகளில் திட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தரையில் அமர்ந்து கொண்டு, புரண்டனர். இதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டதாகவும், ஊரடங்கு அமலில் உள்ளதால் நாங்கள் மீண்டும் நேரம் ஆகிவிட்டது. கலைந்து செல்லுங்கள் என சொன்னதற்கு, கலைந்து போக சொன்னால் உங்களை அடித்துக் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்படி இதனால் தங்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, தகாத வார்த்தைகளிலும் திட்டடியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயராஜ் மற்றும் பொன்னீஸ் மீது காவல்நிலைய குற்ற எண் 312/2020 யு/எஸ் 188, 269, 294 (பி), 353, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.