தூத்துக்குடி - மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதால் பாரம்பரிய தோணி தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - மாலத்தீவு இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் மாலத்தீவு போக்குவரத்து மற்றும் பயணிகள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். இந்த சரக்கு கப்பல் தூத்துக்குடியில் இருந்து கிளம்பி கொச்சி துறைமுகம் வழியாக மாலத்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகம் சென்று அங்கிருந்து மாலே துறைமுகம் வரை செல்லும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றிருந்தபோது உறுதியளித்தப் படியும், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி காட்சி மூலம் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையிலும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதி கிளம்பிச் சென்ற முதல் கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து 16 சரக்கு பெட்டகங்களையும், 2000 டன் பொது சரக்குகளையும் ஏற்றிச் சென்றது.
இந்நிலையில் சரக்கு பெட்டக கப்பல்களின் வருகையால் ஏற்கெனவே தூத்துக்குடி - கொழும்பு இடையிலான தோணி போக்குவரத்து அடியோடு நின்று போன நிலையில், மாலத்தீவுக்கு மட்டுமே தற்போது தூத்துக்குடியில் இருந்து தோணி போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கேயும் நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப் பட்டுள்ளதால் பாரம்பரிய தோணித் தொழில் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தோணி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி கடலோர தோணி உரிமையாளர் சங்க செயலாளர் லெசிங்டன் கூறும்போது, கடந்த 1990-ம் ஆண்டு வரை தூத்துக்குடியில் தோணி தொழில் சிறந்து விளங்கியது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு மட்டும் 40 தோணிகள் காய்கறிகள், பழங்கள், கருவாடு, அத்தியாவசிய பொருட்கள் போன்ற சரக்குகளை ஏற்றி சென்று கொண்டிருந்தன. அதன் பிறகு சரக்கு பெட்டக கப்பல்களின் வருகையால் தோணி தொழில் மெல்ல மெல்ல நலிவடைய தொடங்கியது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் கொழும்புக்கு தோணி போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது.
தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மட்டும் 15 தோணிகள் சென்று வருகின்றன. 300 முதல் 400 டன் கொள்ளளவு கொண்ட இந்த தோணிகள் மூலம் காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்கள், சான உரம் போன்ற சரக்குகள் இங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கின்றன. அதுபோல அங்கிருந்து பழைய இரும்பு பொருட்கள் இங்கே வருகின்றன. இந்த தொழிலை நம்பி 5000 முதல் 6000 தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் தூத்துக்குடி- மாலத்தீவு இடையிலான தோணி போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணி தொழிலை காப்பாற்ற கப்பல் கட்டணத்தை தோணி கட்டணத்தைவிட குறைவாக நிர்ணயிக்க கூடாது. தோணி போக்குவரத்துக்கு என குறிப்பிட்ட சரக்குகளை ஒதுக்கி தர வேண்டும்.
மேலும், இந்த சரக்கு கப்பல் போக்குவரத்தை தூத்துக்குடியில் இருந்து இல்லாமல் மங்களூரு, கொச்சியில் இருந்து மாலத்தீவுக்கு இயக்கலாம். இதன் மூலம் இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவும் பலப்படும். பாரம்பரிய தோணி தொழிலும் பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கையை மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கூறும் இவர், நேரடி சரக்கு கப்பல் சேவையால் தோணி கட்டும் பணியில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது என்றார்.