திருமழிசை சந்தையில் காய்கறிகள் விற்பனையின்றி அழுகியதால் தினந்தோறும் குப்பையில் கொட்டப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிகமாக சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் கடைகளை நடத்த போதிய வசதிகள் இல்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலையில் வியாபாரம் செய்வதாக கூறுகின்றனர். கடும் வெயில் காரணமாக காய்கறிகள் விற்பனையாகவில்லை என்றும், அவை தினந்தோறும் அழுகிய நிலையில் மூட்டை, மூட்டையாக குப்பையில் வீசப்படுவதாகவும் வருந்துகின்றனர்.
இதற்கிடையே நேற்று பெய்த சிறு மழைக்கு திருமழிசை சந்தையில் உள்ள பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி தருகிறது. இதனால் காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கி நகர முடியாமல் நிற்கின்றன. வியாபாரிகள் வாகனங்களை உள்ளே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகளை இறக்கி வைக்க போதிய இட வசதி இல்லாத காரணத்தால் காய்கறிகள் மழையில் நனைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
எனவே கோயம்பேடு சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அழுத்தமாக கோரிக்கை வைத்துள்ளனர். கஷ்டப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மழை மற்றும் வெயில் காரணமாக வீணாகி குப்பையில் கொட்டப்படுவது மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.