டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் அவருடைய அடையார் இல்லத்தில் இன்று நாள் முழுவதும் தீவிர ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு இரவு 8:00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், பழனியப்பன், செந்தில்பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, ரெங்கசாமி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை ஆகிய 18 பேரும் நாளை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி நேரம் கிடைக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெற்ற இணைப்பு விழாவில் பெரும்பாலும் அமைச்சர்களே கலந்து கொண்டனர். இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வராத மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இன்று இரவு செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பதால் மருத்துவரின் அறிவுரையை ஏற்று மீடியாவை சந்திக்க முடியவில்லை எனவும், நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இந்த இடைவெளியில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியலை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.