தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு முடிவடைந்துவிட்டது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பான கட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள், 4 ஆதரவு எம்எல்ஏக்களை குற்றாலத்தில் தங்கியிருக்க டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதிநீக்க வழக்கில் ஒரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் குற்றாலத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன், கருணாஸும் குற்றாலம் செல்கின்றனர். பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவை தினகரன் சந்தித்த பின்னர் 22 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு பேட்டியளித்த தங்கதமிழ்ச்செல்வன் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் புஷ்கர விழாவில் கலந்துகொள்ளவே குற்றாலம் செல்கிறோம் என விளக்கம் அளித்தார். “துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவுறுத்தலின் பேரில் குற்றாலத்தில் தங்கியிருக்க 18 பேரும் செல்கிறோம் என்பது தவறான தகவல். புஷ்கர விழா நாளையுடன் முடிவடைகிறது. அதனால், குற்றாலம் என்று புஷ்ர விழாவில் பங்கேற்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
துணைப் பொதுச் செயலாளர் சொல்லி நாங்கள் செல்லவில்லை. நாங்கள் 18 பேரும் முடிவு செய்துதான் போகிறோம். இரண்டு நாட்கள் குற்றாலத்தில் தங்கி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு வருவோம். ஆதரவு எம்.எல்.ஏக்கள் பிரபு, கலைச் செல்வன், ரத்தின சபாபதி, கருணாஸ் ஆகிய ஆதரவு எம்.எல்.ஏக்களும் எங்களுடன் வருகிறார்கள்.
நாங்கள் அனைவரும் நிரபராதிகள். எந்தக் குற்றமும் செய்யவில்லை. எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகும் என 100 சதவீதம் நம்புகிறோம்” என்றார் தங்க தமிழ்செல்வன்.