எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக, செங்கோட்டையனை முதலமைச்சராக்க விரும்பினோம் என டிடிவி தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்த வழக்கின் விசாரணையின்போது டிடிவி தரப்பு வழக்கறிஞர் பிஸ்.ராமன், தங்கள் மீதான புகார் தொடர்பாக அதிமுக கொறடா, முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரினோம். ஆனால் அனுமதி தரப்படவில்லை. ஆளுநரிடம் மனு கொடுத்தோம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி தகுதி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எந்த நோக்கத்துடன் ஆளுநரிடம் மனு கொடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமன், பல்வேறு முறைகேடுகளில் சிக்கியிருப்பதால் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என மனு அளித்ததாக பதிலளித்தார். எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிவிட்டு யாரை முதல்வராக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள்? என நீதிபதிகள் வினா எழுப்பினர். கட்சியின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பியே ஆளுநரிடம் மனு கொடுத்தோம் என்று வழக்கறிஞர் ராமன் கூறினார்.