அதிமுகவை கடுமையாக விமர்சித்த ராமதாஸ் கூட்டணியில் சேர்ந்துள்ளார் என அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவை கடுமையாக விமர்சித்த ராமதாஸ் கூட்டணியில் சேர்ந்துள்ளார் என அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் “ஜெயலலிதாவிற்கே எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் துரோகம் செய்து விட்டனர். இது ஏற்கெனவே மக்கள் விரும்பாத ஆட்சி. அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்திக்கும்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தற்கொலைக்குச் செய்து கொள்வதற்கு சமம். ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதையே எதிர்த்த ஒரு கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்போது சிறையில்தான் இருப்பார் எனக்கூறிய கட்சி பாமக. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல கட்சிகள் காணாமல் போகும். வெற்றி பெற எதையும் செய்வோம் என்ற கூட்டணிதான் தற்போது அமைந்துள்ளது. இதை அங்கு இருக்கும் சில அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.