நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தாலும் இத்திட்டத்திற்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிப்பதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் இறுதி தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகவேந்திர ராத்தோர் தலைமையிலான அமர்வு இன்று வழங்கியது.
அதில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சூழல்துறை அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க முடியாது எனவும் தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்தால் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் உத்தரவில் தெரிவித்தனர்.
இதற்கு பூவுலகின் நண்பர்கள் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருந்தாலும் இத்திட்டத்திற்கு அளித்துள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாதது வருத்தமளிப்பதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு பலமான வாதங்களை முன்வைக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுவதாகவும் இவ்வழக்கின் மேல்முறையீட்டிலாவது நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.