சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி காலியானது. அதிமுக அம்மா அணியின் சார்பாக டிடிவி தினகரன் முன்பே போட்டியிட்டார். அதிமுக இரு அணிகளாக உடைந்ததன் காரணமாக சசிகலா அணி அதிமுக அம்மா அணி என்றும், அவரை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் களத்தில் குதித்தனர். இதனிடையே பண பட்டுவாடா புகார் எழவே தேர்தல் நிறுத்தப்பட்டது. சில தினங்கள் முன்பு
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால் மீண்டும் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மருதுகணேஷ் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை திமுகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்நிலையில் அதிமுக சார்ப்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாத சூழலில் அதற்குள் மீண்டும் இத்தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக இன்று அவரது அணி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.