ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணையை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு கடந்த 27ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. அதில் அனைவரும் 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிடிவி தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி, பென் டிரைவ் ஒன்றை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். அதில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ மற்றும் அது சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் விசாரணை ஆணையம், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.