ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, சசிகலா தான் வீடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “அதிமுக கட்சி பிரச்னைகள் குறித்து வரும் 29ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில், ஆவணங்கள் தாக்கல் செய்வோம். அதிமுக பொதுக்குழுவை அமைச்சர்கள் கூட்டுவதற்கு சட்ட விதிகளில் இடம் இல்லை என்பது அப்போது தெரியும். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச் செயலாளராக நான் இருக்கிறேன். எனவே பொதுச்செயலாளருக்கு தான் பொதுக்குழுவை கூட்டும் உரிமை உள்ளது. தற்போதுள்ள அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது குப்பை எடுப்பவர்களை தூண்டிவிட்டு சசிகலாவின் படத்தை கிழித்தது திமுக. அதனால் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை பயன்படுத்தவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வீடியோவை எடுத்தது சசிகலா தான். அப்போது ஜெயலலிதா நைட்டி அணிந்து இருந்ததால் அந்த வீடியோவை இதுவரை வெளியிடவில்லை. நீதி விசாரணையின்போது அதை வெளியிடுவோம்” என்று கூறினார்.