குடியரசுத் தலைவர் தேர்தலில் டிடிவி தினகரன் அணியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவருக்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தனர். அத்தோடு டெல்லியில் ராம்நாத் கோவிந்த் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்யும் நிகழ்வில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுகவின் மற்றொரு அணியாக பிரிந்துள்ள டிடிவி தினகரனின் நிலைப்பாடு இன்றுவரை தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவரும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கே தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். சசிகலா உத்தரவுப்படி அதிமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் ராம்நாத்திற்கே ஆதரவு அளிப்பார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின் மூன்றாக பிரிந்துள்ள அதிமுக தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரே வேட்பாளருக்கே ஆதவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.