தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடுபத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வழங்கினார்.
நீட் தேர்வு காரணமாக, மருத்துவ கனவை பறிகொடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு கண்டனப் போராட்டங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், அனிதாவின் குடும்பத்தினரை தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் திருமாவளவன் உடன் சென்றார். அப்போது, அதிமுக அம்மா அணி சார்பில் அனிதா குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை தினகரன் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 20 பேர் சேர்ந்து தலா 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பொதுச்செயலாளர் நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டதாக தினகரன் தெரிவித்தார். பின்னர் பேசிய திருமாவளவன், அனிதாவின் குடும்பத்திற்கு தினகரன் நிதியுதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். திருமாவளவன் தன்னுடன் வந்ததில் அரசியல் எதுவுமில்லை என தினகரன் கூறினார்.