மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு சரிபட்டு வரமாட்டார்கள் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பிப்லப் குமார் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. முதலில் மகாபாரத காலத்திலேயே இணைய வசதி இருந்தது என்று கூறி அவர் சர்ச்சையில் சிக்கினார். அதனையடுத்து, சர்வதேச அழகிப் போட்டிகள் குறித்தும், டயானா ஹைடன் குறித்தும் பிப்லப் தேவ் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டயானா ஹைடனும் அவரது கருத்துக்கு வேதனை தெரிவித்து இருந்தார். இதை அடுத்து தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிப்லப் தேப், பெண்மையை அவமரியாதை செய்யும் நோக்கத்தோடு தாம் பேசவில்லை என்று தெரிவித்தார்.
அந்த வரிசையில் ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்கள் குறித்து பில்பல் தேவ் கூறிய கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கடந்த காலங்களில் மனித நேயத்தின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவார்கள். ஆனால், தற்போது, மருத்துவர்களும், இன்ஜினியர்களும் அந்தத் தேர்வுகளை எழுதுகிறார்கள்” என்றார். மேலும், “மெக்கானிக்கல் இன்ஜினியர்களைக் காட்டிலும் மருத்துவர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு பொறுத்தமானவர்கள்” என்று கூறியுள்ளார்.
பிப்லப் தேவ் பேசுகையில், “ஒரு சிவில் இன்ஜினியர் ஐஏஎஸ் பதவிக்கு வந்தால், அவரால் கூடுதலாக கட்டுமான திட்டங்களை செயல்படுத்த முடியும். மெக்கானிக்கல் இன்ஜினியர்களால் அப்படி செய்ய முடியாது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவுடன் ஒருவர் சிவில் சர்வீஸை தேர்வு செய்யக் கூடாது. சிவில் இன்ஜினியர்களுக்கு நிர்வாகம் மற்றும் சமூகத்தை கட்டமைப்பதற்கான அனுபவமும் அறிவும் உள்ளது. அதேபோல், ஒருவர் மருத்துவராக இருந்தால், ஒருவருக்கு நோய் ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிப்பதற்கான அறிவு இருக்கும்” என்று கூறினார்.