அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்தவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய பெண்களுக்கு உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கப்படுகிறது என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிப்லப் குமார் பேசுகையில், “இந்திய பெண்கள் அழகு சாதனப் (ஒப்பனை) பொருட்களை பயன்படுத்தியதில்லை. அவர்கள் ஷாம்பூவை பயன்படுத்தியதில்லை. இந்திய பெண்கள் தங்களது கூந்தலில் உள்ள பொடுகுகளை அகற்ற இலைகளை (செம்பருத்தி) பயன்படுத்தினார்கள். நம்முடைய பெண்கள் வெந்தைய தண்ணீரை பயன்படுத்தி தலைமுடியை பராமரித்தார்கள். சேற்றை பயன்படுத்தி குளித்தார்கள்” என்று கூறினார்.
மேலும், “அழகிப் போட்டி நடத்துபவர்கள் சர்வதேச மாஃபியாக்கள். இந்தப் போட்டிகள் மூலம் 125 கோடி மக்கள் தொகையில் பாதியளவு உள்ள இந்திய பெண்களை சந்தைக்காக கவர்ந்திழுக்கிறார்கள். அதனால் தான் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பியூட்டி பார்லர் உள்ளது.
பாரிஸ் நகரில் உள்ள சர்வதேச ஃபேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் சர்வதேச மார்க்கட்டிங் மாஃபியாக்கள். அவர்கள் தான் பெண்களை தேர்வு செய்து நடக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். யார் இந்த வருடம் உலக அழகி ஆக வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்துவிடுகிறார்கள். இது நூறு சதவீதம் உண்மை” என்று பிப்லப் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.