'அவமதிப்பு, அச்சுறுத்தல்...' - கேரள தேர்தல் களத்திலிருந்து 'விலகிய' திருநங்கை வேட்பாளர்!

'அவமதிப்பு, அச்சுறுத்தல்...' - கேரள தேர்தல் களத்திலிருந்து 'விலகிய' திருநங்கை வேட்பாளர்!
'அவமதிப்பு, அச்சுறுத்தல்...' - கேரள தேர்தல் களத்திலிருந்து 'விலகிய' திருநங்கை வேட்பாளர்!
Published on

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற பெருமிதத்துடன் பேசப்பட்ட அனன்யா குமாரி தற்போது தேர்தல் பிரசாரக் களத்திலிருந்து விலகியுள்ளார். தான் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தன்னை வேட்பாளராக பரிந்துரைத்த ஜனநாயக சமூக நீதிக் கட்சியின் (டி.எஸ்.ஜே.பி) தலைவர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அனன்யா தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி கடந்துவிட்ட போதிலும், 28 வயதான அலெக்ஸ் தனது தேர்தல் பிரசாரத்தை இனி தொடரப்போவதில்லை என்று அவர் முடிவு செய்துள்ளார்.

கேரள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனநாயக முன்னணியை (யுடிஎஃப்) பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பி.கே. குன்ஹாலிக்குட்டிக்கு எதிராகவும், இடது ஜனநாயக முன்னணியை (எல்.டி.எஃப்) பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் பிஜிஜிக்கு எதிராக களமிறங்க முடிவு செய்தவர் அனன்யா.

"டி.எஸ்.ஜே.பி தலைவர்கள் யு.டி.எஃப் வேட்பாளர் பி.கே. குன்ஹாலிக்குட்டியைப் பற்றி மோசமாக பேசவும், எல்.டி.எஃப் அரசாங்கத்தை விமர்சிக்கவும் என்னை கட்டாயப்படுத்தினர். மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது முகத்திற்கு திரையிட்டுக்கொள்ளும்படி, கட்சித் தலைவர்களால் நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். எனது ஆளுமையை மறைக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன் என்று நான் கூறியதைத் தொடர்ந்து எனக்கு அவர்கள் இன்னல்களை கொடுக்கக ஆர்ம்பித்தனர்" என்கிறார் அனன்யா.

மேலும், "என்னை டி.எஸ்.ஜே.பி கட்சித் தலைவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். என்னை முன் நிறுத்துவதற்கு அவர்களுக்கு சில திட்டங்களும் காரணங்களும் இருந்தன. ஆனால், எனக்கு அது முன்பு புரியவில்லை. எனக்கென்று தனியாக ஓர் ஆளுமைத்திறன் மற்றும் எனக்கான தனிப்பட்ட சொந்த கருத்துகள் உள்ளன. அதனை விட்டுக்கொடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை" என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

டி.எஸ்.ஜே.பி தலைவர்கள், அவர்களை எதிர்க்கும்போது கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக அனன்யா குமாரி அலெக்ஸ் கூறினார்.

"அவர்கள் என்னை ஒரு பாலியல் தொழிலாளிபோல சித்தரித்து அவமதித்தனர். கேரளாவில் திருநங்கைகளுக்கு பிரதிநிதித்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக நான் தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால் வெங்கரா தொகுதியில் இருந்து போட்டியிட எனக்கு அறிவுறுத்தியது கட்சிதான். இது எனது முடிவு அல்ல" என்று உண்மையை உடைக்கிறார்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பெருமன் நகரைச் சேர்ந்தவர் அனன்னியா குமாரி அலெக்ஸ். அவர் கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி ஆவார். அவர் ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞர் மற்றும் ஒரு தனியார் சேனலில் பணிபுரியும் செய்தி தொகுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com