வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார்.
கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வறுமையில் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
கஜா புயல் மற்றும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்தைக் கண்காணிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார். நகர்பகுதிகளில் வசிக்கும் 25 லட்சம் பேருக்கும், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் 35 லட்சம் பேருக்கும் இந்த நிதி உதவி, அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதனிடையே இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.