மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வோர் 5 ஆண்டுகளுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். விதி மீறல் புகார்களை cVIGIL என்ற செயலி மூலம் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, இந்த ஆண்டு முதல் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு பெறும் V-VPAT இயந்திர முறை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர்களுக்கு சந்தேகம் இருந்தால் 1950 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் எனவும் இல்லையென்றால் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.