ஏரி, குளங்களை திமுகவினர் துர்வார தமிழக அரசு தடைவிதிக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை திமுகவினர் தூர்வாரி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் கட்சராயன் ஏரியை தூர்வாரிய திமுகவினர், அங்கு மணல் கொள்ளை நடப்பதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சராயன் ஏரியை பார்வையிட நேற்று நேரில் சென்றார். நேரில் சென்ற ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்ததோடு ஸ்டாலினை கைதும் செய்தனர்.
இந்நிலையில் தூர்வாரும் பணியில் ஈடுபடும் திமுகவை தடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் முறையிடப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.