இந்துக் கடவுள்களை மேடை போட்டு விமர்சித்தால் சோடா பாட்டில் வீசவும் அஞ்சமாட்டோம் என, ஸ்ரீவில்லிப்புதூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜீயர், சாமியார்களால் என்ன செய்து விட முடியும் என நினைப்பவர்களுக்கு, எதற்கும் துணிந்தவர்கள் என்பதை காட்டுவோம் என கூறியுள்ளார். மேலும், ''நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்'', ''மேடையை நோக்கி எங்களுக்கும் கல் எறியத் தெரியும்'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஜீயர் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “கருத்து சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது. சோடாபாட்டில் வீசுவேன் எனப் பேசியது பொறுப்பற்ற பேச்சு. யார் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “ஜீயர் ஆக வேண்டும் என்றால் அதற்கு ஒரு பயிற்சி உள்ளது என்பது இன்றுதான் தெரிகிறது. ஜீயர் ஆவதற்கு ஜாதி உள்ளிட்ட சில அடிப்படை தகுதிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சோடா பாட்டில், கல்லெறிய தெரிந்தால்தான் ஜீயர் ஆக முடியும் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஜீயரின் ஒவ்வொரு பேச்சுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அதனால் மேடையில் பார்த்து எச்சரிக்கையுடன் பேச வேண்டும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி. திராவிட இயக்கங்கள் மதயானைகளை அடக்கியே பழக்கப்பட்டவர்கள். கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று அண்ணா கூறியுள்ளார். அதனால், சோடா பாட்டில், கல் எடுத்தாலும் அண்ணா வழியில் அதனை சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
சோடா பாட்டில் வீசுவோம் என ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவர் கண்டத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடவுள் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் எழுந்து நிற்பதில்லை என்று கூறுவதும் ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.