அரசியல் களத்தில் தோல்யுற்றோர் நீதிமன்றம் மூலம் அரசுக்கு தொல்லை தர முயன்றது தோல்வி அடைந்துள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்பு மூலம் வழக்கு தொடுத்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என அவர் கூறினார்.
ஜெயலலிதா பட வழக்கு, 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பு வர இருக்கும் தீர்ப்புகளுக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தான் நீதிமன்றம் கூறியுள்ளது என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக் காட்டி திமுக கொறடா சாக்கரபாணி, தினகரன் தொடர்ந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 11 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார் என திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.