காவிரி வழக்கில் மேலும் 2 வாரம் அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளை தெரிந்துகொள்வோம்.
காவிரி விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதேநேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இதனையடுத்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வரைவுத் திட்டத்தை தயாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக, கோரிக்கை மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கூடுதலாக அவசாகம் கேட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது. தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன்
தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
சீமான்
தமிழகத்தின் உரிமையை மறுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. காவிரி நீரை தமிழகத்துக்கு தர விருப்பம் இல்லாமல்தான் மத்திய அரசு அவகாசம் கேட்கிறது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்தாலும் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்காது.
சி.பி. ராதாகிருஷ்ணன்
இருமாநில விவசாயிகளுக்கும் உகந்த வகையில் காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தவே அவகாசம் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.