தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் இதுவரை அரசின் எந்த துறையையும் விமர்சித்தது இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுற்றுப்பயணத்தின்போது ஆளுநர் எந்த அதிகாரிக்கும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைக்காகவே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்வரும் மாதங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பிரிவு 124-ன்கீழ் வழக்கு தொடர்ந்து 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கு இடமிருப்பதையும் ஆளுநர் மாளிகை தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசிய திமுகவினர் 192 பேர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.