தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.
இந்நிலையில் அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து பாஜக குழு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியது.
இந்நிலையில் அதிமுக - பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.