“எனக்கு இன்னும் மிரட்டல் வரவில்லை.. ஆனால்..”: சாட்சி சொன்ன சாத்தான்குளம் காவலர் ரேவதி
சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியளித்த தலைமைக் காவலர் ரேவதி தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டுமென கோரியுள்ளார்.
சாத்தான்குளத்தில் வணிகர்களும், தந்தை மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் கிளைச்சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சிபிஐ தரப்புக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சிபிசிஐடி பிரிவு போலீசார் குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக சாத்தான்குளம் தலைமை பெண் காவலர் ரேவதியின் சாட்சியம் அமைந்துள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லத்தியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நேரத்தில், ரேவதி அங்கிருந்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததாகவும், சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியை மிரட்டும் வகையில் காவலர்கள் நடந்து கொண்டதாகவும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என காவலர் ரேவதி ‘The Federal' இணையதளத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “எனது பெயர் வெளியே வராது என நினைத்து நான் மாஜிஸ்திரேட்டிடம் அந்த சம்பவம் குறித்து கூறினேன். ஆனால் எனது பெயர் அனைத்து இடங்களிலும் வெளியாகிவிட்டது. தற்போது எனக்கு பாதுகாப்பு வேண்டும். நான் அச்சத்தில் உள்ளேன். நானும், எனது குடும்பத்தினரும் மாவட்டத்திற்குள்ளாக எப்படி செல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.
அத்துடன், “சம்பவத்தன்று நடந்ததை எல்லாம் நான் மாஜிஸ்திரேட்டிடம் கூறிவிட்டேன். எனவே ஊடகத்தில் அதைக் கூற இயலாது. இதுவரையில் எனக்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது வேறு விதமாகவோ உயரதிகாரிகள் யாரிடம் இருந்தும் மிரட்டல்கள் வரவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியாது. நான் இன்னும் காவல்துறையில் தான் இருக்கிறேன், அங்கு எனக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. எனது பணிக்கு நான் உண்மையாக இருந்தேன் என நினைக்கிறேன். அதனால் தான் நான் சம்பவத்தன்று நடந்ததை எல்லாம் மாஜிஸ்திரேட்டிடம் கூறினேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கூறும்போது, சம்பவத்தன்று ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் இரவு முழுவதும் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள் என ரேவதி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். அத்துடன் மேசையின் மீது இருந்த லத்தியில் ரத்தக்கரை இருந்ததை ரேவதி உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.