பரபரப்பான செய்திகளுக்காக ஸ்டாலின் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை திமுக, காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். இதனையடுத்து, முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். முதலமைச்சர் அறை முன் 20க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர். போராட்டம் நடத்திய ஸ்டாலினை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். பின்பு, தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பரபரப்பான செய்திகளுக்காக ஒரு நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார் என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், “அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து ஸ்டாலின் திடீரென வெளியேறிவிட்டார். ஸ்டாலினை நான் பார்க்கவில்லை. அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு வந்தபோதே சந்திக்க உள்ளதாக ஸ்டாலின் என்னிடம் தெரிவித்து இருக்கலாம்” என்றார்.
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது; கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை மதிக்க வேண்டும்” என்று கூறினார்.