அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதால்தான் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரங்கணி தீ விபத்து சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதால்தான் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையேற அனுமதிப்பதில்லை. அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும். மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியின்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கிணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற மாலையில் மதுரை செல்கிறேன். குரங்கணி காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும். காட்டுத்தீக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
தேனியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், “குரங்கணி வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட காடு ஆகும். வழக்கமாக இப்பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. அனுமதி பெறாமல் அவர்கள் ட்ரெக்கிங் சென்றுள்ளார்கள். அதனால்தான் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றார். தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
இதனிடையே, மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு, வழிகாட்டிகள் நியமனம் போன்ற விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.