மத்தியில் ஆளும் தேசிய கட்சி நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகளில் கால்வாசியைதான் பெற்றுள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக சாதனை! ஆளும் தேசிய கட்சி தமிழக இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகளில் கால்வாசியைதான் பெற்றுள்ளது. இது பொறுப்பை உணர வேண்டிய தருணம்” என்று கூறியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு, ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும் போது தினகரன் வெற்றிபெறுவார் என தெரிகிறது. ஜெயலலிதா மரணம் மூலம் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுவிடுவார். 2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சுப்ரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட்டில், ஆர்.கே.நகரில் திமுகவுக்கும், டிடிவி தினகரனுக்கும்தான் போட்டி இருப்பதாகவும், தமிழர்கள் தினகரனுக்கு வாக்களியுங்கள் என்றார். ஜெயலலிதா மரணத்தை அடுத்து கடந்த சட்டமன்றத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 21 ஆம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.