திமுக பரப்புரை வாகனத்தை தடுத்து நிறுத்தி பிளக்ஸ் பேனர்களை கிழித்து அ.தி.மு.க. பிரமுகர் அராஜகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில்(தனி) திமுக கூட்டணி சார்பாக ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க சேயூர் தேவேந்திரர் நகர் தி.மு.க. கிளைச் செயலாளர் நாகராஜ், பரப்புரை வாகனத்தில் திமுக தேர்தல் பரப்புரை பாடலை ஒலிக்கவிட்டு புஞ்சைதாமரைக்குளம் பகுதியில் நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பரப்புரை வாகனத்தை ஓட்டிவந்த வெங்கடேஸ், புஞ்சைதாமரைக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வரும்போது, பரப்புரை வாகனத்தை, பைக்கில் வந்த அ.தி.மு.க. நபர் மறித்துள்ளார். பின்பு பிரச்சார பாடலை உடனடியாக அணைத்துவிட்டு இந்த இடத்தை விட்டு போக வேண்டும். இல்லை என்றால் வாகனத்தை எரித்துவிடுவேன் என மிரட்டியதோடு வாகனத்தின் சாவியை பிடுங்கியுள்ளார்.
இதனையடுத்து பாடலை அணைத்துவிட்டு போய்விடுகிறோம் எனக் கூறி சாவியை தரும்படி டிரைவர் மற்றும் கிளைச் செயலாளர் இருவரும் கேட்டுள்ளனர். அப்போது அந்த சாவியின் மூலமாகவே பரப்புரை வாகனத்தில் இருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்துவிட்டு சாவியை கொடுத்த அந்த நபர் பைக்கில் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் இச்சம்பவம் குறித்து சேயூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.