பிரிட்டீசாருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்தவர் திப்பு சுல்தான் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
திப்பு சுல்தான் ஜெயந்தி ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி கர்நாடக அரசால் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை அரசு தரப்பில் கொண்டாடக்கூடாது என பா.ஜ.கவும் விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல இந்து அமைப்புகளும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திப்பு சுல்தான் இந்து கொள்கைகளுக்கு எதிரானவர் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.
இதனிடையே, இந்த ஆண்டு நடக்கவுள்ள திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு தன்னை அழைக்க வேண்டாம் என்று பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் திப்பு ஜெயந்தி வழக்கம் போல் விமர்சையாக கொண்டாடப்படும் என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சட்டசபை கட்டிடம் ‘விதான சவுதா’வின் வைரவிழா கொண்டாட்டத்தில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், “திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். அவர் முன்னேற்றத்திற்கு ஒரு முன்னோடியாக இருந்தார். போர் சமயங்களில் அவர் மைசூர் ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். பின்னர் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் பின்பற்றினர்” என்று கூறினார்.
கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் குடியரசு தலைவரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.