மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 இடங்களில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் போல் டிராக்கர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 125 இடங்களை கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை பொருத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி 5 இடங்களிலும், திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் எனக் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதியில் பாஜக கூட்டணி 42 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளடக்கிய மற்ற கட்சிகள் 36 இடங்களிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேற்வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பாஜக கூட்டணி 11 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
மேற்வங்கத்தில் காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது என டைம்ஸ் நவ் விஎம்ஆர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.