புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை வழியாக உதவி கோரிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் உதவி கோரிய 24மனி நேரத்திற்குள் தேடி சென்று உதவி செய்துள்ளனர் நம் குழுவினர்.
சென்னை அடுத்த குன்றத்தூர் சிவன்தாங்கள் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் மிட்டாய், பேணா, கர்ச்சீப் உள்ளிட்டவைகளை விற்பனை செய்கிறவர்கள். தற்போது ஊரடங்கு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டளதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கூட அவதிபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலரும், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு தொடர்புகொண்டவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற நம் குழுவினர், மறுநாள் காலையிலே அவர்கள் குடியிருக்கும் சிவன்தாங்கள் பகுதிக்கு நேரடியாக சென்று ஒரு மாதத்திற்கு தேவையான 20 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
அப்போது நம்மிடையே பேசிய அவர்களில் ஒருவர், "உதவி கேட்ட 24 மணி நேரத்திற்குள் தேடி வந்து உதவி செய்த, புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை குழுவினருக்கு எங்கள் அனைவர் சார்பிலும் நன்றி" என்றார். அத்துடன் தமிழக அரசுக்கு அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக, தங்களையும் மாற்று திறனாளிகள் என அங்கீகரித்து தங்களுக்கான உதவி தொகைகளை விரைந்து வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் தங்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகளாக உள்ளனர் எனக்கூறி, அதன் அடிப்படையில் அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி, வேலை வழங்க அரசு வழிவகை வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'