வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இங்கு போட்டியிடுவதற்கான காரணம் என்ன ? ஓர் அலசல்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதும் சந்தித்த முதன் முதலில் சந்தித்தது நாடாளுமன்ற தேர்தல் தான். இதில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், 1,45,082 ஓட்டுகளை பெற்று, பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தார்.
அதிலும் கோவை தெற்கில் 23,838 ஓட்டுகளும், கோவை வடக்கில் 27,549ஓட்டுகளும், சிங்காநல்லூரில் 28,634 ஓட்டுகளும், கவுண்டம்பாளையத்தில் 33,594 ஓட்டுகளும், சூலூரில் 15,196 ஓட்டுகளும், பல்லடத்தில் 15,997 ஓட்டுகளும் பெற்றார்.
குறிப்பாக, நகர்ப்புற குடியிருப்புகள் மிகுந்த கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி வாங்கிய ஓட்டுகள், தி.மு.க, அ.தி.மு.க-வினரை திரும்பி பார்க்க வைத்தது. நகர்புறத்தில் இருக்கும் வரவேற்பையும் வாய்ப்பையும் விடக்கூடாது என்று எண்ணிய அக்கட்சியின் தலைவர் கமலும், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், கோவையில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.
அதேபோல அவர் போட்டியிட தேர்வு செய்திருக்கும் கோவை தெற்கு தொகுதியில், இந்த முறை அதிமுக-வோ, திமுக-வோ நேரடியாக போட்டியிடவில்லை. அதற்குமாறாக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் இங்கு களம்காண்கின்றன. இதுவும் கமல்ஹாசன் வெற்றி காண ஏதுவாக இருக்கும் என கருதியதாலும், தேசிய கட்சிகளை எதிர்த்து வெற்றி வெற்றால் தேசிய அளவில் கிடைக்கும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டே கோவை தெற்குத் தொகுதியில் களம் காண்கிறார் கமல்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளும் போராட்டஙகளும் சூடுபிடித்துள்ளது. அதேபோல் அதிமுக இத்தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்ததால் போராட்டம் நடத்திய அதிமுக நிர்வாகிகள் பாஜகவிற்கு இத்தொகுதியில் வேலை பார்க்க ஆர்வம் காட்டாத சூழலே நிலவுகிறது. ஆகவே இரு தேசிய கட்சிகளும் இத்தொகுதியில் பின்னடைவை சந்திக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசியலில் களம்காணும் கமல்ஹாசன் உண்மையில் அரசியல் கதாநாயகனாக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக வேலை செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.