வீட்டு வேலைகளை எந்த தொந்தரவும் இல்லாமல் பார்ப்பதற்காக தனது குழந்தைகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைத்த தாயின் டிக் டாக் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் வறுத்தெடுத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான கேப்ரியல் டன் என்ற பெண், வீட்டில் இருக்கும் வேலைகளை முடிப்பதற்காக ஒரு அட்டைப்பெட்டிக்குள் சில க்ரெயான்ஸ் கலர் பென்சில்களையும் போட்டு இரு மகள்களையும் அதில் அடைத்திருக்கிறார்.
குழந்தைகள் இருவரும் அட்டைப்பெட்டிக்குள் வரைந்து விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் எளிதாக வீட்டு வேலைகளை முடித்திருக்கிறார் கேப்ரியல். இதனை வீடியோவாக எடுத்து இரண்டு பகுதிகளாக Ultimate mum hack என்ற பெயரில் தனது டிக்டாக் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
இதனைக் கண்ட நெட்டிசன்கள், குழந்தையை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைத்துதான் வீட்டு வேலைகளை பார்க்க வேண்டுமா? ஏன் உங்கள் வீட்டில் ஒரு அறை இல்லையா? இது கொடுமையாகவும், உங்கள் சோம்பேறித்தனத்தையும் குறிக்கிறது என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார். இப்படியாக பலரும் கேப்ரியலின் இந்த ஐடியாவுக்கு எதிராக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள கேப்ரியல், “இந்த ஐடியாவை அபே ஃப்ரான்கோ என்ற மற்றொரு டிக்டாக் பயனரிடம் இருந்துதான் தெரிந்துகொண்டேன். கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதற்கு பதில் இப்படி எளிமையாக பார்ப்பது பிடித்திருக்கிறது” என்றிருக்கிறார்.
கேப்ரியலின் இந்த செயலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், சிலர் ஆதரித்தும் பதிவிட்டிருக்கிறார்கள். அதில், “எல்லாரும் outside box-ல் தான் யோசிப்பார்கள். நீங்கள் inside box-ல் யோசித்திருக்கிறீர்கள். இந்த ஐடியா எனக்கு பிடித்திருக்கிறது” , “என் பசங்களெல்லாம் 30 நிமிஷம் கூட இதுல இருக்க மாட்டாங்க. சீக்கிரத்தில் சண்டைபிடித்துக் கொள்வார்கள்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர், இதுப்போன்ற டெக்னிக்கை தாங்களும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.