நவீன காலம் வெகு வேகமாக சுழன்று கொண்டிருப்பதால் அதற்கு நிகராக ஓட வேண்டிய கட்டாயத்துக்கு மக்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் பொருளாதார சிக்கல்களை தீர்க்க வாங்கும் சம்பளம் அல்லது வருமானத்தை காட்டிலும் கூடுதலாக பணம் ஈட்ட வேண்டி பங்குச்சந்தை, தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் என பல வகைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இல்லையேல் வழக்கமான வேலை முடிந்ததும் பகுதி நேர வேலையையும் பார்க்க பலரும் தவருவதில்லை.
இப்படி இருக்கையில், ரியல் எஸ்டேட் வேலை பார்க்கும் கீட்டன் வான் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் கூடுதல் பணம் ஈட்டும் பொருட்டு தன்னுடைய சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டு, அதே வளாகத்தில் உள்ள கேரேஜை தனக்கான வீடாக மாற்றி தங்கி வருகிறார். இதன் மூலம் கூடுதலாக சம்பாதிப்பதோடு, தனது வீட்டின் மீதான கடனையும் சுலபமாக அடைத்து வருகிறார்.
இது குறித்த வீடியோக்களையும் தனது டிக்டாக் பக்கத்தில் கீட்டன் பதிவிட்டிருக்கிறார். அதில், “என் சொந்த கேரேஜில் வசிப்பதற்காக
எனக்கு பணமும் கொடுக்கப்படுகிறது” என்றும், “பிரதானமாக இருக்கும் சொகுசு பங்களாவை வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதற்காக மாதம் 2,000 டாலர் (1.65 லட்சம் ரூபாய்) வாடகையாக வருகிறது. இதில், 1,800 டாலர் (1.48 லட்சம்) கடன் போக, எஞ்சிய 200 டாலர் எனக்கான பாக்கெட் மணியாக வைத்துக்கொள்வேன்” என்றிருக்கிறார்.
மேலும், “பெரிய பங்களா வீட்டில் வாழ்வதற்கான எந்த தேவையும் எனக்கு இருக்கவில்லை. அந்த வீட்டில் வசித்து தனியாக கடனை அடைப்பதற்கு எனக்கான சிறிய இடத்தை உருவாக்கி அங்கிருந்தபடியே கடனையும் அடைத்து நிம்மதியாக வாழ்ந்துக்கொள்வேன். இதுவே எனக்கு போதும்” என்றும் கீட்டன் தனது டிக்டாக் வீடியோவில் கூறியிருக்கிறார்.